பெண்கள் மட்டும் தனியாக அமர்ந்து மது அருந்தும் வகையில் ஏற்பாடுகளை செய்து கோவையில் பிரபல ஓட்டல்கள் சில கல்லூரி மாணவிகளுக்கு வலை விரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

   சென்னைக்கு அடுத்தபடியாக ஐ.டி நிறுவனங்கள் இருக்கும் நகரம் கோவை. இங்கு பணியாற்ற தமிழகம் மட்டும் இன்றி வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கோவையில் தங்கியுள்ளனர். வார இறுதி நாட்களை இவர்கள் மும்பையில் சிறப்பாக கொண்டாடுவதை போன்று கோவையிலும் கொண்டாட சில தனியார் நட்சத்திர விடுதிகள் வாரம்தோறும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

   குறிப்பாக பெண்கள் மட்டும் பிரத்யேகமாக அமர்ந்து மது அருந்தும் ஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சில ஓட்டல்கள் வெளிப்படையாக விளம்பரங்கள் செய்கின்றன. மேலும் உணவு அருந்த வரும் பெண்களுக்கு இலவசமாக ரம், ஒயின், ஜின் போன்றவை வழங்கப்படும் என்றும் அந்த விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளன. கோவையில் உள்ள வடமாநில இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை குறி வைத்து இந்த விளம்பரங்கள் செய்யப்பட்டன.

   ஆனால் இந்த விளம்பரங்களை பார்த்து ஈர்க்கப்பட்டது, கோவையில் உள்ள செல்வந்தர்களின் மகள்கள் தான் என்கின்றனர் ஓட்டல் ஊழியர்கள். துவக்கத்தில் வட மாநில இளம் பெண்கள் மட்டும் ஓட்டலுக்கு தங்கள் தோழிகளுடன் வந்து மது அருந்திச் சென்றனர். தற்போது கோவையை சேர்ந்த இளம் பெண்கள் மட்டும் அல்லாமல் அருகாமையில் உள்ள ஊர்களின் இளம் பெண்களும் மது அருந்த ஓட்டலுக்கு வருகின்றனர் என்கின்றனர்.

    மேலும் கோவையில் பப் போன்று செயல்படும் சில ஓட்டல்கள் ஆண் – பெண் இணைந்து நடனம் ஆட அனுமதிப்பதாக சொல்லப்படுகிறது. இங்கும் ஏராளமான பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களை அழைத்து வந்து கெட்ட ஆட்டம் போடுவதாக சொல்கிறார்கள். கோவையை சேர்ந்த பெண்கள் மட்டும் அல்லாமல், கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் வெளியூர்களைச் சேர்ந்த தமிழக பெண்களும் தற்போது வெகு சாதாரணமாக கோவை பப்புகளுக்கு வருவதாக சொல்லப்படுகிறது.

   இதற்கெல்லாம் காரணம் வார இறுதி நாட்களில் சலுகை விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது தான் என்கின்றனர் போலீசார். மேலும் இந்த ஓட்டல்கள் முறையாக லைசென்ஸ் பெற்று இயங்குவதால் நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதே சமயம் இந்த ஓட்டல்களில் போதை மருந்து புழக்கம் இருப்பதாகவும் சில புகார்கள் வருவதாகவும், அது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.