Asianet News TamilAsianet News Tamil

தேர்தலில் ஓட்டுப்பெட்டிகளை உடைத்து, வாக்குச்சீட்டுகள் தீ வைத்து எரிப்பு; திமுகவினர் சாலை மறியல்...

Breaking ballot boxes in election and burning the ballot papers dmk road block ...
Breaking ballot boxes in election and burning the ballot papers dmk road block ...
Author
First Published Apr 3, 2018, 7:43 AM IST


பெரம்பலூர்
 
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த சிலர், ஓட்டுப்பெட்டிகளை உடைத்து, வாக்குச்சீட்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தீ வைத்து எரித்தனர். இதனைக் கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க உறுப்பினர் தேர்தலுக்கான பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி, வேட்பு மனுதாக்கல், மனு வாபஸ் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்தன. 

இதில் அ.தி.மு.க., தி.மு.க மற்றும் அமமுக இடையே போட்டிகள் நிலவியது. ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று காலை கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. அப்போது அங்கு கும்பலாக வந்த சிலர், தேர்தல் நடக்கும் அறைக்குள் புகுந்து அங்கிருந்த டேபிள், நாற்காலிகள், ஓட்டுப் பெட்டிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். 

அதனைத் தொடர்ந்து வாக்குச்சீட்டு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான ஆவணங்களை கிழித்து தீ வைத்து எரித்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் நல்லத்தம்பி, ஜெகதீசன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆத்தூர் - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஞானசிவக்குமார் தலைமையிலான காவலாளர்கள், அங்க வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தி.மு.க.வினர், “அ.தி.மு.க.வினர் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை இரத்து செய்துவிட்டு, தங்கள் கட்சியினர் வெற்றி பெற்றதாக அறிவித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். எனவே, தேர்தலை இரத்து செய்யாமல் மீண்டும் நடத்துவோம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தால்தான் மறியலை கைவிடுவோம்” என்றனர். 

அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி மணிமேகலை, "தேர்தலை இரத்து செய்யாமல் ஒத்திவைப்பதாக" கூறினார். 

இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆத்தூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios