பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : தமிழக அரசின் வழிமுறைகள் வெளியீடு!
அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், காலை உணவு திட்டம் செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், காலை உணவு திட்டம் செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதிகளில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து நாட்களிலும் காலை உணவு வழங்குதலை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் இப்பணியை மேற்பார்வைப்பட வேண்டும்.
2. காலை உணவுத் திட்டத்தால் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் அடிப்படையில் மாணவர்களின் உடல் நலனைக் கவனத்தில் கொண்டு தரமான மற்றும் சுகாதாரமான உணவைப் போதுமான அளவிற்கு வழங்குதலை உறுதி செய்தல் வேண்டும்.
3. சுத்தமான சமையல் பாத்திரங்களை பயன்படுத்துவதை உறுதி செய்தல் வேண்டும்.
4. காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களைச் சுத்தம் செய்தல், அவற்றை சுத்தமாக சமைத்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தரம் மற்றும் சுவையை உறுதி செய்தல் வேண்டும்.
5. மாணவர்கள் தட்டு மற்றும் கைகளைச் சுத்தமாக கழுவுதலை பார்வையிடுதல் மற்றும் உறுதி செய்தல் வேண்டும்.
6. மாணவர்களைச் சுத்தமான இடத்தில் அமர வைத்து பரிமாறுவதை உறுதி செய்தல் வேண்டும்.
7. உணவு பரிமாறுவதற்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உதவி செய்யலாம்.
8. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் ஆசிரியர்களுடன் சேர்ந்து சுழற்சி முறையில் உணவை சுவைத்து தரத்தை அறிதல் வேண்டும்.
9. மாணவர்களுக்கும், மாணவிகளும் கைகழுவும் வசதி இருத்தலை உறுதி செய்தல் வேண்டும்.
10. சுகாதாரமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.
மேற்கொண்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி சிறப்பான முறையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்குமாறு சார்ந்த மாவட்டங்களிலுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரை கேட்டுக் கொண்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.