புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் காவிரி குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. இதனால் ஆதங்கமடைந்த மக்கள் உடைந்த குழாய்களை உடனே சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நகராட்சிக்கு உள்பட்டது கோவில்பட்டி பகுதி. இங்கு காவிரிக் குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி நீர் வீணாக வெளியேறி வருகிறது.

அதுமட்டுமின்றி அந்த நீர் சாக்கடையில் கலக்கிறது. இந்நீர் சாலையில் வீணாகி ஆறு போல் ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

குடிக்கும் நீர் சாக்கடையில் கலந்து வீணாக சாலையில் ஓடுவதை பார்க்கும் அப்பகுதி மக்கள் பெரும் வேதனை அடைகின்றனர். குடிநீருக்காக ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் முதல் சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இங்கு சீராக இருக்கும் குடிநீர் இப்படி வீணாய் போகிறதே என்று ஆதங்கமும் படுகின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் உடைந்த குழாய்களை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.