பெங்களூருவில் இருந்து பியூட்டி பார்லர் வேலைக்கு சேலம் வந்த இளம் பெண் ஒருவரை விபச்சாரப் அழகி என  நினைத்து இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இளைஞர் காட்டுப்பகுதிக்குள் சென்றபோது பெண் கூச்சலிட்டதையடுத்து, அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.  இதையடுத்து கூகுள் மேப் மூலம் போலீசார் அந்த இளம் பெண்ணை மீட்டனர்.

பெங்களூரை சேர்ந்த  காயத்ரி என்ற இளம் பெண்,  சேலத்தில் உள்ள ஒரு அழகு நிலையம் ஒன்றில் வேலைக்காக  விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் காயத்ரியை தொடர்பு கொண்டு, வேலை காலியாக இருப்பதாகவும், உடனடியாக சேலம் வரும்படியும் அழைத்துள்ளார். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் காத்திருப்பதாகவும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பியூட்டி பார்லர் வந்துவிடும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து காயத்ரி கடந்த 18 ஆம் தேதி இரவு  பெங்களூருவில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு  வந்து சேர்ந்தார். பேருந்து நிலையம் எதிரே ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் என்ன ? ஏது என கேட்காமல் காயத்ரி மோட்டார் சைக்கிளில் ஏறினார்.

இதையடுத்து மோட்டார் சைக்கிள் சேலம் குரும்பப்பட்டி உயிரியில் பூங்காவை தாண்டி காட்டுப்பகுதிக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காட்டுப்பகுதியிலா? அழகு நிலையம் இருக்கும் என்று சந்தேகம் அடைந்தார்.

அப்போது அந்த இளைஞரிடம் இளம்பெண் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் பார்சல் சாப்பாட்டை கொடுத்து சாப்பிடும் படி கொடுத்தார். சாப்பிட்டு முடித்ததும் அவர், காயத்ரியை கற்பழிக்க முயன்றார்.  இதனை எதிர்பார்க்காத காயத்ரி கூச்சலிட்டதையடுத்து  இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்து காயத்ரி  கூகுள் உதவியுடன் கொடுத்த தகவலின் பேரில் டவுன் அனைத்து மகளிர் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு அழைத்து வந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அன்பழகன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

சம்பவ நாளான்று இரவு அன்பழகன் விபசாரத்திற்கு ஒரு பெண்ணை அழைத்து விட்டு அந்த பெண்ணுக்காக சேலம் புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அதே நேரத்தில் பெங்களூரை சேர்ந்த இளம்பெண் பியூட்டி பார்லர் வேலைக்கு செல்வதற்காக அதே பகுதிக்கு வந்துள்ளார். இதனால் நாம் அழைத்த பெண் தான் இவர் என்று நினைத்து அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றார்.

பின்னர் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருக்க முயன்ற போது அவர் மறுத்ததால் பயந்து போய் அங்கிருந்து அன்பழகன் தப்பி யோடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.