பெரியபாளையம் அருகே 3 வயது குழந்தையை கொலை செய்தது தொடர்பாக, அவரது மாமன் கைது செய்யப்பட்டார்.
பெரியபாளையம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், எல்லாபுரம் ஒன்றிய தேமுதிக தொண்டர் அணிச் செயலாளராக உள்ளார். இவருக்கு ஹேமா என்ற மனைவியும் சுரேகா, சுனிதா ஆகிய இரு மகள்களும், ஹேமந்த் என்ற 3 வயது குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு முருகன் குடும்பத்தினருடன் சேர்ந்து காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை தாழிடாமல் உறங்கியுள்ளனர். அதிகாலை எழுந்து பார்த்தபோது, ஹேமந்த்தை காணவில்லை. பின்னர், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அப்பகுதியிலுள்ள அம்மன் கோயில் அருகே முள்புதரை ஒட்டியிருந்த சிமெண்டு தொட்டியில் கை, கால் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையிலும் ஹேமந்த் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மாணிக்கம், பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்பட்ட தமிழ்செல்வன் என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
உறவின் அடிப்படையில், அவர் ஹேமந்தின் மாமன் ஆவார். அவர், அப்பகுதியில் பலரிடம் முரட்டுத்தனமாக நடந்து வந்திருக்கிறார். மேலும், அவரது இரு சக்கர வாகனத்தை அவரே தீ வைத்து எரித்திருக்கிறார்.
இந்நிலையில், காவல்துறையினர் தமிழ்செல்வனைக் கைது செய்து விசாரணை செய்ததில், அவர் ஹேமந்தை கொலை செய்தது தெரியவந்தது. ஹேமந்தை கடந்த வாரம் தூக்கி விளையாட முயன்றபோது, முரண்டு பிடித்ததால் தான் கோபமாக இருந்ததாகவும், அதனால் அவரைக் கொலை செய்ததாகவும் தமிழ்செல்வன் தெரிவித்ததைக் கேட்டு குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாது, போலீஸாரும் அதிர்ந்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், புழல் சிறையில் அடைத்தனர்.
