பிற ஆண் நண்பர்களுடன் பழகாதே என கண்டித்தும் கேட்காத காதலியை இளைஞர் ஒருவர்  பிளேடால் சரமாரியாக வெட்டினார். அதில் படுகாயம் அடைந்த காதலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யபிரகாஷ். ஏர் இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் இவரும்  சென்னை  திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி பணி புரிந்து வரும் திருச்சியைச் சேர்ந்த  லதா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

அதே நேரத்தில் லதா வேறு சில  ஆண் நண்பர்களுடன் பழகுவதாக சந்தேகமடைந்த சத்யபிரகாஷ் அவரை பல முறை கண்டித்திருக்கிறார். ஆனால் காதலி மீண்டும் மீண்டும் ஆண் நண்பர்களுடன் பழகி வந்திருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே  கருத்து வேறுபாடு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து பேச வேண்டும் என சத்ய பிரகாஷ் லதாவிடம் கூறியிருக்கிறார்.  இதையடுத்து  பல்லாவரம் கண்டோன்மண்ட் பூங்கா அருகே  லதாவும், சத்ய பிரகாசும்  சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகரித்திருக்கிறது. வாக்குவாதத்தின் முடிவில், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் காதலியின் தலை மற்றும் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக சத்யபிரகாஷ் அறுத்திருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் சரிந்தார்.  உடனடியாக அருகில் இருந்தவர்கள்  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து லதாவை  பல்லாவரம் காவல் துறையினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். மேலும் சத்ய பிரகாஷை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.