கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் பேருந்து நிலையத்தில், பிறந்து இரண்டு நாள்களே ஆன கைக்குழந்தையை பயணியிடம் கொடுத்த இரண்டு இளம்பெண்கள் பேருந்தில் தப்பியோடி தலைமறைவாகினர். அவர்களை காவலாளர்கள் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையத்திற்கு நேற்று காலை 7 மணியளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம்பெண்கள் இருந்தனர். அந்த பெண்களில் ஒருவர் பச்சிளம் குழந்தை ஒன்றை கையில் வைத்திருந்தார்.

அந்த பேருந்து மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையத்திற்கு வந்தது. அவர்கள் அங்கு இறங்கி பேருந்து நிலையத்தில் நின்ற ஆண் பயணி ஒருவரிடம் கைக்குழந்தையை கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு வந்து குழந்தையை வாங்கிக் கொள்கிறோம் என்று அதுவரை குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளனர்.

அதற்கு சம்மதித்து அந்தப் பயணியும் கைக் குழந்தையை வாங்கி வைத்திருந்தார். அவர் நீண்டநேரம் காத்திருந்தும், அந்த பெண்கள் வரவில்லை. இந்த நிலையில், அங்கிருந்த காந்திபுரம் நோக்கி செல்லும் நகர பேருந்தில் கைக்குழந்தையை கொடுத்த இளம்பெண்கள் இருவரும் ஏறியுள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த ஆண் பயணி, இளம்பெண்களை அழைத்தபடி பேருந்தின் பின்னால் ஓடினார். அதற்குள் நகர பேருந்து பஸ் வேகமாக சென்றுவிட்டது.

இதனைய்யடுத்து அந்த பயணி, அங்கிருந்தவர்களின் உதவியுடன் சாய்பாபா காலனி காவல்நிலையம் மற்றும் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தார். 

அதன்பேரில் காவலாளர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கைக்குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, இருப்பிட மருத்துவ அதிகாரி மருத்துவர் சௌந்திரவேலிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த கைக்குழந்தை, குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள், "அரசு மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்ட கைக்குழந்தை பிறந்து இரண்டு நாள்களே ஆன பெண் குழந்தை. அந்த குழந்தை 2 கிலோ எடை உள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து இந்தாண்டு மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டன" என்று கூறினர்.

இதுகுறித்து சாய்பாபா காலனி காவலாளர்கள் வழக்குப்பதிந்து, கைக்குழந்தையை பயணியிடம் கொடுத்துவிட்டு தலைமறைவான இரண்டு இளம்பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.