bore well fault Lorry water stopped Women fight for drinking water

ஆழ்துளை கிணறு பழுதடைந்ததாலும், தண்ணீர் கொண்டுவரும் லாரி நிறுத்தப்பட்டதாலும் குடிநீர் இன்றி தவித்த பெண்கள் தஞ்சையில் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மானோஜிப்பட்டி ஐயன் திருவள்ளுவர் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் அத்தியாவசியத் தேவைக்கான குடிநீர் இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வழங்கப்பட்டது. இவற்றில் ஒரு ஆழ்குழாய் கிணறு மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எனவே, சீரான குடிநீர் வழங்ககோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றுக் குடங்களுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் ஈஸ்வரிநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த மருத்துவக் கல்லூரி காவலாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்”. அதனைத் தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியது, “ஆழ்குழாய் கிணறு மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து இருந்தால் குடிநீர் பிரச்சனை வந்து இருக்காது. ஆனால், ஏற்கனவே போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் மேலும் 40 அடிக்கு குழாய் இறக்கப்பட்டதால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்த பிரச்சனையை தீர்க்க லாரிகளில் குடிநீர் கொண்டுவரப்பட்டு வழங்கினார்கள். கடந்த 2 மாதங்களாக அந்த பணியும் நடைபெறவில்லை. எனவே, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.