சென்னை, ஐஸ் அவுஸ் பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடியை கொல்ல சதி திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.

சென்னை, ஐஸ் அவுஸ், அனுமந்த் நகரில் வசித்து வருபவர் எல்லையப்பன். இவருடைய மனைவி செல்வராணி. இவர்கள் இருவரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்துள்ளனர்.

தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள், ரவுடிகளுக்கு விநியோகம் செய்து வந்ததாகவும் தெரிகிறது. தங்களைத் தேடி வருபவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகளை விற்பனை செய்துவதும், வெடிகுண்டுகளைக் கேட்பவர்களின் இடத்திற்கே சென்று விற்றும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், எல்லையப்பன் நாட்டு வெடிகுண்டுகளை ஒரு துணிப் பையில் சுற்றிக் கொண்டு பைக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்றுள்ளார். நடேசன் சாலை - பி.பி. சாலை சந்திப்பில் திரும்பும்போது, அங்கு சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதியுள்ளார்.

மோதிய வேகத்தில், பைக்கில் கொண்டு சென்ற நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்துள்ளது. இதில் எல்லையப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வெடி சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், எல்லையப்பனுக்கு ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதும், நாட்டு வெடி குண்டுகளை தயாரித்து ரவுடிகளுக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், காஞ்சிபுரம் ரவுடி பெரிய மகேசும், எல்லையப்பனும் சேர்ந்த சசிகுமார் என்ற ரவுடியை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் எல்லையப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.