Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலையார் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; தரிசனத்திற்கு வரும் அடியார்களுக்கு பலத்த பாதுகாப்பு...

Bomb threat to Annamalaiyar temple Strong security for the worshipers of the darshan ...
Bomb threat to Annamalaiyar temple Strong security for the worshipers of the darshan ...
Author
First Published Jan 3, 2018, 9:42 AM IST


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் அடியார்கள் மீது வெடிகுண்டு வீசுவோம் என்று மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து கோவிலுக்கு வரும் அடியார்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேசுவரர் (அண்ணாமலையார்) கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அடியார்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பௌர்ணமி நாட்களில் இலட்சக்கணக்கான அடியார்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் நிர்வாக அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

அந்த கடிதத்தில், "காஞ்சீபுரம் இரயில் நிலையத்தில் இந்து சிற்பங்களை தார் பூசி அழித்தது போல புத்தாண்டன்று கோவிலுக்கு வரும் அடியார்கள் மீதும், பௌர்ணமி கிரிவலம் செல்லும் அடியார்கள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசுவோம" என்று  அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் மற்றும் கிரிவலம் செல்லும் அடியார்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், கடிதம் அனுப்பியவரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 30-ஆம் தேதி திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது.

அதன்பேரில் நேற்று முன் தினம் புத்தாண்டு அன்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அடியார்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இரவாளிப்பிரியா மேற்பார்வையில் காவலாளர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கோவிலுக்கு வரும் அடியார்கள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் பை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே கோவிலுக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. கிரிவலப் பாதையிலும் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று அருணாசலேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைப்பெற்றது. ஏராளமான அடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கோவிலுக்குள் அடியார்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி அடியார்கள் கொண்டுவந்த பொருட்கள் "மெட்டல் டிடெக்டர்" கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios