கோவை குண்டு வெடிப்பு கைதி அப்துல் ஒசீர் திடீரென்று இறந்தார். அவரது பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடந்தது. அப்துல் ஒசீருக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர் என்ற புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்தவர் அப்துல் ஒசீர் (45). இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அப்துல் ஒசீர், கடந்த 1998–ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14–ஆம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் தடா வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அப்துல் ஒசீருக்கு கடந்த 15 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது, தன்னை சிறையில் பார்க்க வந்த தனது மனைவி மற்றும் உறவினர்களிடம், தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், உடல் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அப்துல் ஒசீரை கடந்த 4 நாட்களாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்று சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் நேற்றுக் காலையும் அப்துல் ஒசீரை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிறைக்காவலர்கள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் காலை 11.40 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவர் திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அப்துல் ஒசீரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் ஒசீரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். தகவல் பரவியதும் மேலும் பலர் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவை மாநகர காவல் துணை கமிஷனர் இலட்சுமி, கோவை மாநகர உதவி கமிஷனர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வளாகம் மற்றும் கோவை நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இது குறிப்பாக டவுன்ஹால், உக்கடம், ஆத்துப்பாலம், கரும்புக்கடை உள்பட கோவை நகரின் மேற்கு பகுதியில் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையில் இறந்துபோன அப்துல் ஒசீரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது பிரேத பரிசோதனையை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடத்தி வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் மதியம் 3 மணியளவில் கோவை 3–ஆம் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு வேலுச்சாமி கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். மாஜிஸ்திரேட்டு வந்ததும் அவரது முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
அப்துல் ஒசீரின் பிரேத பரிசோதனை நடந்ததும் அவரது உடலை காவல்துறையினர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால், உடலை வாங்க அவர்கள் மறுத்து விட்டனர். அப்துல் ஒசீருக்கு தகுந்த சிகிச்சை அளிக்காததே இந்த திடீர் இறப்புக்கு காரணம் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என்றும், அவரது உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், கோவை மாநகர காவல்துறை ஆய்வாளர் அமல்ராஜ், மேற்கு மண்டல காவல் ஐ.ஜி. பாரி ஆகியோர் கோவை மாநகர காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் கோவை மாவட்ட இஸ்லாமிய இயக்கங்கள், ஜமா அத் மற்றும் அரசியல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் தலைமையில் பல்வேறு அமைப்பினர் அளித்துள்ள மனுவில், “எந்த ஒரு கைதிக்கும் உரிய பாதுகாப்பினை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். கோவை சிறை நிர்வாகத்தை பொறுத்தவரை இது முதல் சம்பவம் அல்ல. ஏற்கனவே நிகழ்ந்த பல்வேறு மரணங்கள் மட்டுமின்றி இந்த மரண நிகழ்விலும் அடிப்படையான காரணம் சிறை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே முதன்மையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் கைதிகள் இறக்கும்போது பல்வேறு சமாதானங்களை மட்டும் கூறுகிறார்கள்.
சிறை மருத்துவமனையில் போதுமான அளவிற்கு தகுதியான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதால் இதில் முறையான நீதி விசாரணை உரிய நீதி அமைப்பின் மூலம் நடத்த வேண்டும். சிறைத்துறையின் அலட்சியப் போக்கு உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு தகுந்த நஷ்டஈடு வழங்கவும், குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார தேவைகளை கருத்தில் கொண்டு குடும்பத்தில் தகுதி வாய்ந்த நபருக்கு அரசு வேலை வழங்க பரிந்துரைக்க வேண்டும்.
கைதிகளுக்கு இதயம், சிறுநீரகம் குறைபாடு போன்ற கடுமையான நோய்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உறுதி செய்ய வேண்டும்.” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, இந்திய தவ்ஹித் ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர், இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் அனீபா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில நிர்வாகி இஸ்மாயில் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர்.
அவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் மற்றும் அனைத்து ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் அகமது, பொதுச் செயலாளர் சி.டி.சி.ஜப்பார் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோவை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகம் சென்றனர். அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதன்பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று அப்துல் ஒசீர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இரவு 8 மணியளவில் அப்துல் ஒசீரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். அதன்பின்னர் அப்துல் ஒசீரின் உடல் வேன் மூலம் அரசு மருத்துவமனையில் இருந்து வின்சென்ட் ரோடு, உக்கடம், பாலக்காடு ரோடு வழியாக கரும்புக்கடையில் உள்ள அவரது வீட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வல பாதை நெடுகிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அப்துல் ஒசீரின் உடல் இன்று (வியாழக்கிழமை) காலையில் அடக்கம் செய்யப்படுகிறது.
