சேலம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டதா? அதற்காக உறவினர்களிடம் பேரம் பேசப்பட்டதா? போன்ற கேள்விகளை கேட்டு சென்னை மருத்துவ குழுவினர் குற்றம் சாட்டப்பட்டுள்ள சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (39). தொழிலாளி. இவர் கடந்த 25-ஆம் தேதி விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சீரங்கன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மூளைச்சாவு அடைந்தவரின் உடல், உறுப்புகளை மருத்துவமனை நிர்வாகம் தனியாருக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் வளர்மதி தலைமையிலான குழுவினர் தனியார் மருத்துவமனைக்கு சென்று, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் பிறருக்கு விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் 2-வது நாளாக தனியார் மருத்துவமனை மற்றும் சீரங்கன் குடும்பத்தினரிடம் சென்னையில் இருந்து மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், அதிகாரிகள் சேலம் மாவட்ட இணை இயக்குனர் வளர்மதி தலைமையில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், உடல் உறுப்புகள் விற்கப்பட்டதா? என்பது குறித்து நரிப்பள்ளம் பகுதியில் உள்ள இறந்த சீரங்கன் மனைவி கனகம்மாள், மகள் ரஞ்சிதா, மகன்கள் சஞ்சய், பீரவீன்குமார் மற்றும் அவருடைய உறவினர்களிடம் மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் இறந்த சீரங்கனின் உடல் தானம் செய்ய தனியார் மருத்துவமனை சார்பில் வலியுறுத்தப்பட்டதா? அதற்காக பணம் பெறப்பட்டதா? அல்லது தானாக முன்வந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதா? என்பது குறித்தும் விசாரித்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் ரோகிணி செய்தியாளர்களிடம், "மக்கள் நடைமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு உடல் உறுப்பு தானம் செய்யலாம். ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகள் பேரம் பேசப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின் முடிவில் தவறு செய்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.