தமிழகத்தில் சாமியார்கள் பல்வேறு வகையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றார்.  அந்த வகையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர்  ஆன்டிராய்டு செல்போன் வழியாக பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறாராம். கடவுளின் அனுக்கிரகத்தை, ஆன்டிராய்டு செல்போன் வழியாக பக்தர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து வருகிறாராம்.

சாமியாரிடம் அருளாசி பெற்றவர்களிடம் இது குறித்து கேட்டபோது, பக்தர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தாங்க முடியாத கால்வலி, சாமியாரிடம் வந்து ஆசி பெற்றவுடன் தீர்ந்து விட்டது என்று கூறினார். இதேபோல், பெண் ஒருவர் பேசும்போது, தனக்கு கடன் சுமை இருந்ததாகவும், மேலும் தனக்கு பல்வேறு வியாதிகள் இருந்து வந்த நிலையில்,
சாமியாரை சந்தித்து ஆசி பெற்றவுடன் அனைத்து தீர்ந்துபோனது என்றும், தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

அந்த காலத்திலேயே இன்ஜினியரிங் படிச்சவன் என்று கூறிய ஆண்டிராய்டு சாமியார் பாபாஜி, 10 வருடங்களுக்கு முன்பு, தான் ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழைந்ததாகவும், சத்குரு சம்கார மூர்த்தி சந்நதிக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக வந்ததாக கூறினார். சத்குரு சம்கார மூர்த்தி சன்னதிக்கு நுழைந்தபோது, ஒரு பவர் வந்த மாதிரி இருந்துச்சு.
அது சம்கார மூர்த்தியின் கடாட்சம்னு எனக்கு புரிஞ்சது.  அன்றிலிருந்து என்னையும் அறியாமல் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தேன் என்றார்.

சாமியார் பாபாஜியின் அருளாசி வித்தியாசமானது. பக்தர்கள் கொண்டு வரும் செல்போனில் இருந்து தனது செல்போனுக்கு call செய்துவிட்டு பிறகு, பக்தர்கள் கொண்டு வரும் செல்போனை அவர்களது தலை மீது வைத்துவிடுவர். இதன் பின்னர், சில நிமிடங்களுக்குப் பிறகு, பக்தர்கள் தலையில் வைத்துள்ள செல்போன் வைப்ரேஷன் ஆகும். வைப்ரேஷன் ஆகும் அந்த நிமிடம், தங்கள் கவலைகள் தீர்ந்ததாகவும், தனக்குள் ஒரு சக்தி பாய்ந்ததாகவும் அவர்கள் கூறிச் சென்று விடுவார்கள்.

தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு மட்டும் ஆண்டிராய்டு செல்போன் வழியாக அருளாசி வழங்குவதோடல்லாமல், வெளி நாடுகளில் இருக்கும் பக்தர்களுக்கும் சாமியார் பாபாஜி அருளாசி வழங்கி வருகிறாராம்.

செல்போனை தலை அருகே வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறப்படும் நிலையில், பக்தர்களின் தலை மீதே செல்போன் வைத்து அவர்களின் பிரச்சனையை சாமியார் பாபாஜி தீர்த்து வைத்து வருகிறார்...!