அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது பிரச்சாரத்தின் போது பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி காட்டப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Black flag protest against EPS : தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுகவிடம் ஆட்சியை இழந்த அதிமுக, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தற்போது திமுகவிற்கு எதிராக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் பாஜகவோடு கூட்டணியை உருவாக்கியுள்ளது. அடுத்தாக இன்னும் ஒரு சில கட்சிகளை தங்கள் அணிக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

தென் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் மீட்போம், மக்களை காப்போம் என பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் பல இடங்களில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் திமுக அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவில்லையெனவும் குற்றம்சாட்டினார். தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த எடப்பாடி பழனிசாமி தற்போது தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு சிலர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

சங்கரன் கோயிலில் கருப்பு கொடி போராட்டம்

நேற்று நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருந்த நிலையில் சங்கரன்கோவிலில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி வாகனத்தை வழிமறித்து கருப்பு கொடி காட்டி எடப்பாடி ஒழிக என முழக்கமிட்டவர்களுக்கும் எடப்பாடியின் ஆதரவாளகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கம்பால் தாக்கிக் கொண்டனர். அதை தடுக்க முற்பட்ட காவல் ஆய்வாளருக்கும் அடி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடியையும் பொருட்படுத்தாமல் காவல் ஆய்வாளர் தனி ஒருவனாக நின்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து இரண்டு தரப்பையும் அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.