Asianet News TamilAsianet News Tamil

நிதிநுட்ப நகரம் கட்ட பிஎஸ்டி நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: அண்ணாமலை கண்டனம்!

நிதிநுட்ப நகரத்தின் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம்  பிஎஸ்டி நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

BJP TN president annamalai condemns financial technology city construction contract
Author
First Published Jun 19, 2023, 3:52 PM IST

தமிழக அரசின்  2021- 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளதால் அதனை முன்னெடுக்கும் வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிதிநுட்ப நகரம், நிதித்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைப்பதற்கு எதுவாக சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு பணிபுரிபவர்களுக்கு அந்நகரத்திலேயே குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன், வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற அணைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். இந்நகரம் அமைவதால் மூலம் 12,000 கோடி ருபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், சுமார் 80,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிதிநுட்ப நகர திட்டத்தின் ஒரு பகுதியாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5.6 கோடி சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான ஒரு நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடிக் கட்டடமும் கட்டப்படவுள்ளது. நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அணைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள அலுவலகங்கள் இங்கு அமைக்கப்படும். இந்த நிதிநுட்ப கோபுரம் அமைவதால் மூலம், 1000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன் சுமார் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் மற்றும் ரூ.254 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப கோபுரம் கட்டும் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், நிதிநுட்ப நகரத்தின் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம்  பிஎஸ்டி நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “2009 ஆம் ஆண்டு, கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட நிதிநுட்ப நகரம், தற்போது, பிஎஸ்டி என்ற கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 14 ஆண்டுகளாக ஒரு செங்கல் கூட வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, திறனற்ற திமுக அரசு தேர்ந்தெடுத்துள்ள பிஎஸ்டி நிறுவனம், தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டியதாக இதே திமுக ஆட்சியால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் என்பதுதான் விந்தை.

 

 

தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டியதாக பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் மீது புகார் வந்ததை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைத்த IIT ஆய்வுக்குழு அறிக்கையில், இந்த நிறுவனம் கட்டிய ஏழை மக்களுக்கான குடியிருப்புகளில் செய்யப்பட்டுள்ள பூச்சுவேலை, 90% தரமற்றது என்றும், இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்றும் சட்டசபையில் திமுக அமைச்சர் தாமோ அன்பரசன் கூறினார். இனிமேல் அரசுப் பணிகள் பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கப்படாது என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

வீட்டு வாடகைக்காக மாதம் 9 லட்சம் வாங்கும் அண்ணாமலை.. இதை அமலாக்கத்துறை விசாரிக்காதா.? கோவை செல்வராஜ் கேள்வி

ஆனால் தற்போது, சென்னை நந்தம்பாக்கத்தில் 250 கோடி மதிப்பில் அமையவுள்ள நிதிநுட்ப நகரத்திற்கான கட்டுமானப் பணிக்கு, இதே பிஎஸ்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது திமுக அரசு. இனிமேல் அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்ட நிறுவனத்திற்கு, மீண்டும் அரசுப் பணி ஒப்பந்தம் வழங்கி அழகு பார்க்கிறது திமுக அரசு.  

ஐஐடி ஆய்வறிக்கை என்ன ஆயிற்று? அதன் மேல் திறனற்ற திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பொதுமக்கள் வரிப்பணத்தை, மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடாமல், இடையில் யாரோ சம்பாதிக்க, ஏற்கனவே தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதா?

உடனடியாக, பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் மீதான ஆய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios