பாஜக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.

தீண்டாமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும்  சமூக ஆர்வலர் திவ்யபாரதி அண்மையில் கையால் மலம் அள்ளும் கொடுமை குறித்து கக்கூஸ் எனும் ஆவணப்படத்தை இயக்கி, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அதை திரையிட்டார்.

இவர் கடந்த 2009ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த போது சுரேஷ் என்ற மாணவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். இதையடுத்து தலித் மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், சுரேஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுரேஷ் உடலை வாங்க மறுத்து திவ்யபாரதி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து 8 ஆண்டுகள் கடந்த பின்பு மதுரை ஆனையூர் காவல் துறையினர் திவ்ய பாரதியை கடந்த வாரம் கைது செய்தனர். தொடர்ந்து திவ்ய பாரதிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திவ்ய பாரதி, தனக்கு பாஜக மற்றும் புதிய தமிழகம் கட்சிப் பிரமுகர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இப்பிரச்சனையை போலீஸ் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.