Asianet News TamilAsianet News Tamil

திமுகதான் காங்கிரஸின் கொத்தடிமை: இபிஎஸ்சுக்கு அண்ணாமலை சப்போர்ட்!

காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டம்தான் திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்

BJP state president annamalai supports edappadi palanisamy and criticized smk stalin on delhi service bill
Author
First Published Aug 9, 2023, 11:33 AM IST

டெல்லி அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நாள் பாஜகவின் பாசிசம் அரங்கேறிய கறுப்பு நாள் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

டெல்லி சேவைகள் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்து வாக்களித்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் மசோதாவை ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், "நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.” என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

துணை ராணுவப் படை மீது மணிப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு: ரவிக்குமார் எம்.பி., கவன ஈர்ப்பு நோட்டீஸ்!

இந்த நிலையில்,  தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக, எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது  வெட்கக்கேடானது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

இதுகுறுத்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைநகர் டெல்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக டெல்லி சேவைகள் மசோதா எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை நேற்று பாராளுமன்றத்திலும் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள்.  முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள்.

 

 

1975ஆம் ஆண்டு, நாட்டில் எமர்ஜென்சி அறிவித்து ஜனநாயகத்தைப் படு குழியில் தள்ளிய இந்திரா காந்திக்கு, 1980ல் `நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என உங்களது தந்தை தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தாரே அதுதான் ஜனநாயகத்தின் கறுப்பு நாள்.

டெல்லி ஒரு யூனியன் பிரதேசம், இது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது என்பதை மாநில உரிமைகளுடன் குழப்பிக் கொள்ளும் தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்து சொல்ல வேண்டும். 

மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பதை, பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios