திமுக, அதிமுகவை அலறவிட்ட பாஜக.. தென் சென்னை தொகுதியில் தாமரை இப்படியொரு அரசு வளர்ச்சியா?
திமுக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் அதன் வாக்கு சதவிகிதம் 33.52 இல் இருந்து 26.93 ஆக குறைந்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அதிமுகவையே பின்னுக்குத் தள்ளி பாஜக கெத்து காட்டியுள்ளதை அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா புள்ளி விவரத்துடன் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்த முறை மக்களவை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியது. திமுக சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதே கூட்டணியுடன் மக்களை தேர்தலை எதிர்கொண்டது. அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து பாஜக, அதிமுக தனித்தனி அணியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.
கடந்த முறை 24 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இம்முறை 22 இடங்களில் மட்டுமே களம் கண்டது. திமுக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் அதன் வாக்கு சதவிகிதம் 33.52 இல் இருந்து 26.93 ஆக குறைந்துள்ளது. நோட்டாவுடன் போட்டியிட்ட கட்சி என்ற விமர்சனத்திற்கு பாஜக இந்த தேர்தலில் பதிலடி கொடுக்கமா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் பாஜக 25 இடங்களில் போட்டியிட்டது. அதில் 10 இடங்களில் 2வது இடமும், 14 தொகுதிகளில் 3வது இடமும் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக மட்டும் 11.24 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. கூட்டணியாக 18.24 சதவிகிதம் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட அதிகம்.
இந்நிலையில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தென் சென்னை தொகுதி வாக்குப்பதிவு குறித்து புள்ளி விவரத்துடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. அதில், 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை விட 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், சைதாபேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
குறிப்பாக 2022 உள்ளாட்சித் தேர்தலில், தென்சென்னை மக்களவைத் தொகுதியின் 55 வார்டுகளில் பாஜக 9.9% வாக்குகளைப் பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் 28% வாக்குகளைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளோம். அது 18% அதிகரித்து, வெறும் 2 ஆண்டுகளில் 2வது இடத்தில் இருந்த அதிமுகவையே பின்னுக்குத் தள்ளியுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உங்களின் கடின உழைப்பை வாக்காளர்கள் செலுத்துவதை விட வேறு எதுவும் திருப்தி தராது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அரசியலில் இருப்பதில் நான் புரிந்துகொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், மக்கள் ஒருபோதும் தவறாக இருக்க முடியாது அல்லது எந்த விளைவுகளுக்கும் குற்றம் சாட்ட முடியாது. அவர்கள் எப்போதும் உண்மையாக உழைக்கும் உண்மையான தலைவர்களுக்கு வெகுமதி அளிக்கிறார்கள்.
பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் முயற்சிகள் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பெரும் பலன் அளித்தன. குறிப்பாக வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் பொறுப்பாளராக இருந்ததற்காக நான் 907 சாவடிகளுக்குள் சென்றுள்ளேன். பூத் கமிட்டி அமைப்பதில் இருந்து, எங்கள் பணியாளர்களுடன் பயணம் செய்வது வரை கடந்த 3 ஆண்டுகளாக நீண்ட பயணம். கடந்த 5 ஆண்டுகளாக இந்த லோக்சபாவின் 1925 சாவடிகளில் நான் தீவிரமாகச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். இதைத் தொடர்ந்து செய்வேன்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு நாங்கள் நிச்சயமாக 24*7 உழைத்து, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இந்த 6 தொகுதிகளில் இருந்தும் அதிக எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்து, பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்போம். தென்சென்னை வாக்காளர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு மாற்று கட்சியாக மட்டுமின்றி, மக்கள் நம்பிக்கையைப் பெற்ற 2வது பெரிய கட்சியாகவும் பாஜக உருவெடுத்து வருவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.