தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், புளியரையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 10ம் தேதி பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்கும் வகையிலான 2 சட்ட திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இது அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் மீண்டும் ஒருவர் கைதானால் அதிகப்பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் அலறிய சென்னை! குத்துச் சண்டை வீரர் ஓட ஓட வெட்டி படுகொலை! பீதியில் பொதுமக்கள்!

அதேபோல் ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த பாஜக நிர்வாகி குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த புளியரை பகுதியை சேர்ந்தவர் குமார் (50). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். பாஜ பட்டியல் அணி முன்னாள் மாவட்ட தலைவரான இவர். தற்போது பாஜக செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் புளியரையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பாஜக நிர்வாகி குமார் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பெண் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டார். 

இதையும் படிங்க: குரூப் 2 தேர்வர்களுக்கு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் குமார் அங்கிருந்து தப்பித்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.