ஊட்டி,
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் காட்டெருமை சுற்றித்திரிந்தது. அதனை சுற்றுலா பயணிகள் கண்டு இரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா 55 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பூங்காவில் 3 ஆயிரம் வகையான தாவரங்கள் உள்ளன. பூங்காவுக்கு அருகில் ராஜ்பவன் உள்ளது. ஊட்டிக்கு ஜனாதிபதி, கவர்னர் ஆகியோர் வந்தால் இங்குதான் தங்குவார்கள். மேலும் அரசு தாவரவியல் பூங்காவையொட்டி சிறிய வனப்பகுதியும் உள்ளது.
இந்த வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் அவ்வப்போது பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம். பொதுவாக இரவு நேரத்தில் வரும் காட்டெருமைகள் பூக்கள் மற்றும் மலர்செடிகளை மேய்ந்து விட்டு அதிகாலைக்குள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் காட்டெருமை ஒன்று பூங்காவில் இருந்து ராஜ்பவன் செல்லும் சாலையின் அருகே படுத்து கிடந்தது. பின்னர் பூங்காவின் மேற்பகுதியில் சிறிது நேரம் சுற்றித்திரிந்த காட்டெருமை, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்டெருமையை பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு இரசித்தனர்.
இது குறித்து பூங்கா ஊழியர்கள், “தற்போது ஒரே ஒரு காட்டெருமை பகல் நேரத்தில் பூங்காவின் மேற்பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது. இந்த காட்டெருமை யாருக்கும் தொல்லை கொடுப்பது இல்லை. அமைதியாக படுத்துகிடக்கும் இந்த காட்டெருமையை சில சுற்றுலா பயணிகள் சற்று தூரத்தில் நின்று கண்டு இரசிக்கின்றனர். பாதுகாப்பு கருதி காட்டெருமை நடமாடும் பகுதியின் அருகில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது இல்லை” என்று அவர்கள் கூறினார்கள்.
