birds sanctuary near villupuram
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த கழுவெளி கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டப் பேரவையில் இன்று தெரிவித்தார்.
2017 -18 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த வியாழக்கிழமை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் ப்ட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து 3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் உறுப்பினர்கள் மெய்யப்பன், பாலையா, விஸ்வநாதன், செல்லையா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.. அதில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.
இதன் தொடர்ச்சியாக வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த கழுவெளியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது..
