bike - car accident son dead Father hurt badly...

அரியலூர்

அரியலூரில் பைக்கில் வந்துக் கொண்டிருந்த தந்தை, மகன் மீது கார் மோதி தூக்கிவீசப்பட்டதில் இரண்டு வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை அடுத்துள்ளது அறந்தாங்கி. இங்குள்ள மேலத் தெருவைச் சேர்ந்த விவசாயி அந்தோணிராஜ் (45). இவருக்கு இரண்டு குழந்தைகள்.

இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் தனது மகன் ஜெய்சனை (2) அழைத்துக்கொண்டு கருணாகர நல்லூர் கிராமத்தில் உள்ள தனது வயலுக்குச் சென்றுள்ளார். பின்னர், வயலில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர்கள், மீன்சுருட்டி அருகே சென்னை - கும்பகோணம் சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அந்தோணிராஜ், ஜெய்சன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே ஜெய்சன் பரிதாபமாக உயிரிழந்தார். அந்தோணிராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த அந்தோணிராஜை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி காவலாளர்கள் நிகழ்விடத்திற்கு வந்து ஜெய்சன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் வசந்த் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த பாலமுருகன் (23) என்பவரை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.