ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினரும், சமூக அமைப்பினரும், கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆர்ப்பாட்டம் போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தீர்ப்பு வழங்கமுடியாது என கூறியது. இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்பினர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். இதனால் பலர் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடியும் நடத்தினர். இதனால், ஜல்லிக்கட்டு மீது பொதுமக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நூறு பேர் திரண்டால் போலீசார் கைது செய்வார்கள். தடியடி நடத்துவார்கள். அதே நேரத்தில் லட்சம் பேர் திரண்டால், போலீசாரால் என்ன செய்ய முடியும், நாளை 16ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது என்ற வாசகத்தை அச்சடித்து ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், மதுரை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.