அகலம் குறைவான திருத்தணி நெடுஞ்சாலையில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பிரம்மாண்ட பாய்லரால் மின் விநியோகம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் இருந்து பிரம்மாண்ட டேங்கர் லாரி ஆந்திர மாநிலம் நெல்லூருக்குச் சென்றது. இந்த டேங்கர் அதிக உயரத்தில் இருந்ததால் மின்சார வயரில் பட்டு பாதிப்பு ஏற்படும் என முன்கூட்டியே தொழிற்சாலை நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதன்பேரில் சுமார் 2 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்பட்டது.
மேலும் அந்த லாரி சென்றதன் காரணமாக திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் இருந்து டோல்கேட் வரை போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர் காமராஜர் சிலையில் இருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைவதால் இதுபோல் கனரக வாகனங்கள் செல்வது அவசியமாகிறது.
எனவே, நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
