தூத்துக்குடி

மகாகவி பாரதியார் கல்வி பயின்ற எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைப்பெற்றது. பாரதி அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திமுக நகரச் செயலர் ஆ.பாரதி கணேசன் தலைமை வகித்தார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் கு.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். நல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், "மாககவி பாரதியார் கல்வி பயின்ற, அரசு உதவி பெறும் பள்ளியான எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியை அரசுடைமையாக்க அரசை வலியுறுத்துவது, 

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தரக்கோரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்திப்பது, 

ராஜா மேல்நிலைப் பள்ளியை அரசுடைமையாக்க வேண்டியதன் அவசியம் குறித்து எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் எஸ். சேது, மார்க்சிஸ்ட் கட்சி நகரச் செயலர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எம். குணசேகரன், நகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், 

திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலர் லெனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி முருகன் மற்றும் நடராஜன், முனியராஜ், பிச்சைகனி, முத்து முருகன், அழகர்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.