bharathiyar university vice chancellor arrest to got bribe
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் பெற்ற கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் பெறப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் துணைவேந்தர் கணபதி, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக சுரேஷ், லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ரசாயனம் தடவிய ஒரு லட்சம் ரூபாயை ரொக்கமாகவும் 29 லட்சத்திற்கு காசோலையும் கொடுத்து துணைவேந்தரிடம் சுரேஷை கொடுக்க சொல்லியுள்ளனர்.
அதன்படி, சுரேஷிடம் இருந்து துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
