புதுக்கோட்டை,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுக்கோட்டையில் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, பீட்டாவுக்கு பாடை கட்டி இறுதிச் சடங்கும், விஷால், திரிஷாவுக்கு செருப்பு மாலை அணிவித்தும், கோ-கோ கோலா, பெப்சி போன்ற அந்நிய பானங்களை சாலையில் போட்டு உடைத்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராக அதனை தடை செய்யக் கோரியும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.

சல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டும் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை திலகர் திடலில் உரிமைக்குழு மீட்பு சார்பாக இளைஞர்கள், மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலையில் தொடங்கிய போராட்டத்தின்போது கூட்டம் குறைவாகவே இருந்தது. நேரம் செல்ல செல்ல மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அந்த பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகுரு தலைமையில் ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.

கீரமங்கலத்தில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நடிகர் விஷால் மற்றும் நடிகை திரிஷா ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி பதாகை வைத்தனர்.

பின்னர் பீட்டா அமைப்பிற்கு எதிராக, ஒரு பாடையை அமைத்து அதற்கு இறுதி சடங்குகளை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு முன்பு சல்லிக்கட்டு காளை ஒன்றும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது, பின்னர் சண்டை சேவல்களும் கொண்டுவரப்பட்டு சேவல் சண்டையும் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரவு நடிகர் விஷால், நடிகை திரிஷா பதாகைக்கு செருப்பு மாலை அணிவித்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதேபோல கொத்தமங்கலத்தில் நடந்த சல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அந்நிய நாட்டு குளிர்பானங்களான கோ-கோ கோலா, பெப்சி போன்றவற்றை சாலையில் போட்டு உடைத்தனர்.