'சென்னையிலேயே அடக்கம் செய்யுங்கள்; மக்களுக்கு இடையூறு கூடாது'; இறப்பதற்கு முன்பு கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன்!

சென்னையிலேயே எனது உடலை அடக்கம் செய்யுங்கள்; என்னால் மக்களுக்கு இடையூறு கூடாது என்று  இறப்பதற்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக செல்வபெருந்தகை தெரிவித்தார்.

 Before his death, EVKS Elangovan said to bury his body in Chennai ray

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வெண்டிலேட்டர் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்து கேட்டறிந்தார்.

நேற்று மாலை ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் அவரது வீட்டில் சிறிது நேரம் வைக்கப்படும். பின்னர் அவாது உடல் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், தான் இறப்பதற்கு முன்பே, ''சென்னையிலேயே அடக்கம் செய்யுங்கள்; என்னால் மக்களுக்கு இடையூறு கூடாது'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, ''ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பு, காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும். சென்னை மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் என்னை சென்னையிலேயே வைத்து அடக்கம் செய்யும்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் ஏற்கெனவே தனது மகளிடம் கூறியிருக்கிறார். 

நாங்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலை அவரது சொந்த தொகுதியான ஈரோட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அவர் தனது மகளிடம் முன்பே சொல்லியிருந்த காரணத்தால் சென்னையில் வைத்தே அவரது உடல் தகனம் செய்யப்படும்'' என்றார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios