போதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை சக தொழிலாளி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் (42). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கண்ணன் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவரது நண்பர் திருச்சியை சேர்ந்த ஆனந்தன் (24). கோயம்பேடு தக்காளி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி. நண்பர்கள் இருவரும், வேலை முடிந்து இரவு நேரத்தில், கோயம்பேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு 2 பேரும், வழக்கம்போல் கோயம்பேடு மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு மது அருந்தி கொண்டிருந்தபோது,போதை தலைக்கேறியதும், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் வாக்குவாதம் முற்றியதும், ஆத்திரமடைந்த ஆனந்தன், அருகில் பீர் பாட்டிலை உடைத்து கண்ணன் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் அலறி துடித்த அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், அங்கிருந்த குடிமகன்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். ஆனந்தனும் அங்கிருந்து தப்பினார்.

தகவலறிந்து கோயம்பேடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து போலீசார், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருந்த ஆனந்தனை, இன்று அதிகாலையில் சுற்றி வளைத்துகைது செய்தனர்.

கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பஸ் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4க்கு மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. பெரும்பாலும் இங்கு வேலை பார்ப்பவர்கள், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதிகாலையிலேயே லாரிகளில் வரும் சரக்குகளை இறக்குவதால், தங்குவதற்கு வீடு எடுப்பதில்லை. அங்கே பிளாட் பாரங்களிலும், பஸ் நிலையத்திலும் படுத்து தூங்குவார்கள்.

அவ்வாறு செல்பவர்கள், மது அருந்துவதால், உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளிகளுடன் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் தகராறு ஏற்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு வாலிபர்,மார்க்கெட் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் உள்ள முட்புதரில் 3க்குமேற்பட்ட வாலிபர்கள் சடலம் கண்டெக்கப்பட்டது. ஆனால், கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

கோயம்பேடு பஸ் நிலையத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன், சமையல் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். நேற்று மதியம், பஸ் நிலையத்தின் உள்ளேயே பிறந்து சில நாட்களான பச்சிளங் பெண் குழந்தையை பையில் போட்டு வீசி சென்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி இங்கு நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக சுற்றுபவர்களை பிடித்து, விசாரித்து உண்மை தன்மையின்படி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.