Asianet News TamilAsianet News Tamil

மயக்க மருந்து கொடுத்து ‘பியூட்டி பார்லர்’ பெண் கொலை : தப்பிய நபரைத் தேடும் போலீஸ்!

beauty parlour lady murdered by known person who stealing chain near kovilpatti
beauty parlour lady murdered by known person who stealing chain near kovilpatti
Author
First Published Oct 25, 2017, 7:42 PM IST


கோவிபட்டி அருகே மயக்க மருந்து கொடுத்து தம்பதி பியூட்டி பார்லர் பெண்ணைக் கொலை செய்துள்ளது. அங்கிருந்து தப்பிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். 


கோவில்பட்டி ஆழ்வார் தெருவைச் சேர்ந்தவர் முருகராஜ். இவர், வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்பிகா(48). இவர் கருப்பசாமி கோவில் தெருவில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது தோழி, அங்குள்ள ஊராணி தெருவைச் சேர்ந்த கதிரேசன் என்பவரின் மனைவி குருலெட்சுமி(42). இவர் அந்தப் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் பியூட்டி பார்லரில் அம்பிகா மர்மான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருடைய தோழி குருலெட்சுமி, அங்கே மயக்க நிலையில் கிடந்துள்ளார். மேலும் உயிரிழந்து கிடந்த அம்பிகாவின் கழுத்தில் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதாகப் புகார் கூறப்பட்டது. மேலும் போலீஸார் அப்போது மேற்கொண்ட சோதனையில்,  அம்பிகாவின் கழுத்தில் லேசான காயம் இருந்துள்ளது.

எனவே, இந்தக் கொலை குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது,  மயக்க நிலையில் இருந்த குருலெட்சுமி கொடுத்த தகவலின் பேரில் வெங்கடசலாபுரத்தைச் சேர்ந்த ஹரிஸ்(29) என்பவரின் மனைவி சரவணச்செல்வியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.  அதில், அதிர்ச்சிகரமான சில தகவல்கள் வெளியாயின. 

கொலையுண்ட அம்பிகா, பியூட்டி பார்லர் நடத்தி வரும் பகுதிக்கு அருகே சரவணச்செல்வி  சில காலம் முன்னர் வசித்து வந்தார் எனத் தெரிகிறது. அப்போதிருந்து, சரவணச் செல்விக்கும் அம்பிகாவுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அம்பிகாவின் பியூட்டி பார்லருக்கு வரும் சரவணச் செல்வி, அங்கே அடிக்கடி சிகை அலங்காரம் செய்து கொள்ளவும், முகம் அலங்காரம் செய்வதற்கும் வருவாராம். 

சரணவச்செல்விக்கு முதலில் திருமணம் நடைபெற்று கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளார்.  இதன் பின்னர் அவருக்கு பெங்களூரைச் சேர்ந் ஹரிஸ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அவரை 2வது திருமணம் செய்துள்ளார் சரவணச்செல்வி. ஹரிஸுக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் வேலை எதுவும் இல்லாத நிலையில்,  தம்பதியர் இருவரும் கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளனர்.  அவர்கள் இருவரும் ஒரேஇடத்தில் நிரந்தரமாக வேலை செய்ததில்லையாம்.

சரவணச்செல்விக்கு ஜானுஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. ஜானுஸ்ரீ அம்பிகா ப்யூட்டி பார்லர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்த அன்று மதியம், சரவணச்செல்வி பியூட்டி பார்லருக்கு தனது குழந்தையுடன் வந்துள்ளார். பியூட்டி பார்லரில் இருந்த அம்பிகா, குருலெட்சுமி ஆகியோருடன் சரவணச்செல்வி பேசிக் கொண்டு இருந்தபோது ஹரிஸ் செல்போனில்  சரவணச் செல்வியிடம் பேசியுள்ளார். அப்போது அவர், குழந்தை ஜானுஸ்ரீக்கு ஆப்பிள் ஜூஸும், மற்றவர்களுக்கு அத்திப்பழ ஜூஸு ம் வாங்கிவருமாறு கூறியுள்ளார். 

சரவணச்செல்வி கூறியபடி, ஹாரிஸும் ஜூஸ் வாங்கிக் கொண்டு வந்து, அவர்களிடம் கொடுத்துள்ளார்.  இந்நிலையில், சரணவச்செல்வியும்  குழந்தை ஜானுஸ்ரீயும் ஆப்பிள் ஜூஸ் குடித்துள்ளனர். அம்பிகா, குருலெட்சுமி இருவரும் அத்திபழ ஜூஸ் குடித்துள்ளனர். அதைக் குடித்த சிறிது நேரத்தில் அம்பிகாவும், குருலெட்சுமியும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களுக்கு கொடுத்த ஜூஸில் மயக்க மருந்தைக் கலந்துள்ளார் ஹரிஸ்.  ஜூஸைக் குடித்த இருவரும் மயக்கமடைந்த பின், ஹரிஸ் கூறியபடி சரவணச்செல்வி தனது குழந்தையுடன் பியூட்டி பார்லரில் இருந்து வெளியேறியுள்ளார்.  

இந்நிலையில், இதன் பின்னர் என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் குருலெட்சுமி. 

இதை அடுத்து, சரவணச் செல்வியிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  நீதிமன்றம் அருகே தானும், தனது குழந்தையும் நின்றிருந்ததாகவும், அப்போது தனது கணவர் மற்றும் இன்னொரு நபரும் காரில் வந்து, தங்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்குச் சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், ஹரிஸ், அம்பிகாவிடம் இருந்து நகையைப் பறித்து வந்தார் என்றும்,  தூத்துக்குடிக்குச் சென்று அங்குள்ள நகைக்கடையில் அம்பிகாவின் நகையை விற்றுவிட்டு, வேறு புதிய நகைகளை வாங்கிக் கொண்டு வந்ததாகவும், அதன் பின்னர் தங்களை வீட்டில் இறக்கிவிட்டு, ஹரிஸ் மற்றும் அவருடன் வந்த நபர் நகையுடன் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். 

இதை அடுத்து, போலீஸார் ஹரிஸையும், அவருடன் வந்த நபரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஹரிஸ் கைது செய்யப்பட்டதால்தான் அம்பிகா கொலை செய்யப்பட்ட பின்னணி தெரியவரும் என்கின்றனர் போலீஸார். 

தம்பதியினர் இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, நன்கு பழகிய ஒருவரையே நகைக்காக திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios