Asianet News TamilAsianet News Tamil

பெண்களுக்கு மட்டும்தான் அழகு போட்டியா? இதோ முதன் முதலாக நடைப்பெற்ற காங்கேயம் மாடுகளுக்கான அழகு போட்டி. எங்கு?

Beauty for women only? Here is the beauty contest for the Kangayam cattle. Where?
Beauty for women only? Here is the beauty contest for the Kangayam cattle. Where?
Author
First Published Mar 26, 2018, 10:42 AM IST


திருப்பூர்

திருப்பூரில் முதன் முதலாக காங்கேயம் இன மாடுகளுக்கான அழகு போட்டி நடைப்பெற்றது. இதில், பிரிவுகளில் பங்கேற்ற மாடுகள் பரிசுகளை வென்றன. கொம்பு, திமிலை பார்த்து சிறந்த மாடுகளை தேர்வு செய்யப்பட்டன.

ஆண்களுக்கு ஆணழகன் போட்டியும், பெண்களுக்கு அழகு போட்டியும் நடத்தப்படுவது போன்று காளைகளுக்கும், மாடுகளுக்கும் "அழகு போட்டி" நடத்தி பரிசு வழங்குகின்றனர். 

ஆம். பாரம்பரியமிக்க காங்கேயம் இன கால்நடைகளை பாதுகாக்கவும், நாட்டு மாடுகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இதன் சிறப்பு இந்த போட்டி முதல் வருடமான இன்று காங்கேயம் இன கால்நடை திருவிழாவாக நடத்துகிறது. நேற்று காலை நாட்ராயன் கோவில் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்த போட்டி நடைபெற்றது. 

இந்த திருவிழாவில்தான் மாடுகளுக்கு அழகு போட்டி நடைபெற்றது. 4 பல்லுக்கு மேல் உள்ள சிறந்த பெரிய பூச்சிக் காளைகள், 2 அல்லது 4 பல் மட்டும் உள்ள சிறந்த இளம் பூச்சிக் காளைகள், பல் போடாத சிறந்த இளம் பூச்சிக் காளைகள், 4 பல்லுக்கு மேல் உள்ள சிறந்த எருது அல்லது வண்டிக்காளை ஜோடி, 

4 பல்லுக்கு கீழ் உள்ள சிறந்த வண்டிக்காளை ஜோடி, 4 பல்லுக்கு மேல் உள்ள சிறந்த மயிலை பசுக்கள், 2 அல்லது 4 பல் உள்ள சிறந்த மயிலை பசுக்கள், 2 பல் அதற்கு மேல் உள்ள சிறந்த காரி பசுக்கள், 2 பல் அதற்கு மேல் சிறந்த செவலை பசுக்கள், பல் போடாத சிறந்த மயிலை, காரி, செவலை, கிடாரிகள் என 10 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டிக்கு திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து காங்கேயம் இன காளைகள், பசுக்கள், கன்றுக்குட்டிகள் கொண்டுவரப்பட்டன. போட்டி நடக்கும் மண்டபத்துக்கு அருகே பெரிய தோட்டத்தில் மாடுகளை கட்டி வைத்து இளைப்பாறுவதற்காக பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அதுபோல் வாகனங்கள் நிறுத்துவதற்கும் தனியாக வசதி செய்யப்பட்டு இருந்தன.

மாட்டு உரிமையாளர்கள் காலை 9 மணிக்குள் வந்து அழகு போட்டியில் பங்கேற்க தங்கள் மாடுகளை பதிவு செய்து கொண்டனர். மண்டபத்தின் முன்புறம் பார்வையாளர்கள் கண்டு களிப்பதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

மண்டபத்தின் முன்பகுதியில் உள்ள காலி இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மாடுகள் அங்கு காட்சிப்படுத்துவதற்கு வசதி செய்யப்பட்டு இருந்தன. பின்னர் ஒவ்வொரு பிரிவாக அழகு போட்டிகள் நடத்தப்பட்டன.

விழா குழுவினர் ஒவ்வொரு பிரிவாக அறிவிக்க மாடுகளுடன் அதன் உரிமையாளர்கள் அணிவகுத்து மண்டபத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் பார்வையாளர்கள் இருந்த இடத்துக்கு முன்பு மாடுகள் கம்பீரமாக நடந்து வந்து வரிசையாக நின்றன. 

ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர், நாமக்கல் கால்நடை ஆராய்ச்சி கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்து காளை, பசுக்கள், கன்றுகளை தேர்வு செய்தார்கள்.

காங்கேயம் இன மாட்டுக்கு உண்டான முகம், கொம்பு, திமில், வால், உடலமைப்பு, நிறம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு சிறந்த மாடுகளை நடுவர்கள் தேர்வு செய்தார்கள். காளைகள் கம்பீரமாக வந்தன. கொம்பை நன்றாக கூர்மையாக்கி வர்ணம் பூசியும், பசுக்களுக்கு பொட்டு வைத்தும், சலங்கை அணிவித்தும், கழுத்தில் மணிகள் கட்டியும் வண்ண, வண்ண கயிறுகளை கழுத்தில் கட்டியும் அழகுபடுத்தி மாடுகள் கொண்டு வரப்பட்டன. மொத்தம் 387 மாடுகள் பங்கேற்றன.

இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்தோடு வந்து அழகு போட்டியை கண்டு களித்தனர். மாலை 4 மணி வரை போட்டிகள் நடைபெற்றன. பின்னர் சில பிரிவுகளுக்கு 5 பரிசுகளும், சில பிரிவுகளுக்கு 3 பரிசுகளும் என மொத்தம் 42 பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் 4 பல்லுக்கு மேல் உள்ள பெரிய பூச்சிக்காளைகள் பிரிவில் செம்மாபாளையத்தை சேர்ந்த சக்திகுமார் என்பவரின் காளையும், 2 அல்லது 4 பல் மட்டும் உள்ள சிறந்த இளம் பூச்சிக்காளைகள் பிரிவில் திருப்பூர் ஆத்துத்தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் காளையும், 

பல் போடாத சிறந்த இளம் பூச்சிக்காளைகள் பிரிவில் சங்காரவலசுவை சேர்ந்த கிருத்திவாசன் என்பவரின் காளையும், 4 பல்லுக்கு மேல் உள்ள சிறந்த எருது அல்லது வண்டிக்காளைகள் ஜோடி பிரிவில் அரச்சலூரை சேர்ந்த வேலாகுமாரசாமி என்பவரின் காளையும், 4 பல்லுக்கு கீழ் உள்ள சிறந்த வண்டிக்காளை ஜோடி பிரிவில் பல்லடத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் காளையும் முதல் பரிசை வென்றன.

இதுபோல் 4 பல்லுக்கு மேல் உள்ள சிறந்த மயிலை பசுக்கள் பிரிவில் செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மாடும், 2 அல்லது 4 பல் மட்டும் உள்ள சிறந்த மயிலை பசுக்கள் பிரிவில் சமத்தூர் அரண்மனை சங்கர் வானவராயர் மாடும், 2 பல் அதற்கு மேல் உள்ள சிறந்த காரி பசுக்கள் பிரிவில் கரூர் செல்லாண்டிப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மாடும், 

2 பல் அதற்கு மேல் உள்ள சிறந்த செவலை பசுக்கள் பிரிவில் புஞ்சைதலையூரை சேர்ந்த நடராஜ் என்பவரின் மாடும், பல் போடாத சிறந்த மயிலை, காரி, செவலை, கிடாரிகள் பிரிவில் பூந்துறையை சேர்ந்த கோகுல் என்பவரின் மாடும் முதல் பரிசை தட்டிச்சென்றன. அவர்களுக்கு கேடயங்கள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.

பின்னர் 10 பிரிவுகளில் முதலிடத்தை பிடித்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதில் வெற்றி பெற்ற சமத்தூர் அரண்மனை சங்கர் வானவராயருக்கு மொபட் பரிசாக வழங்கப்பட்டது. 

அனைத்து பிரிவுகளிலும் மாடுகளுடன் பங்கேற்ற ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு புஞ்சை தலையூரை சேர்ந்த நடராஜ் என்பவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டன. 

மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios