Battles against protest students
திருப்பரங்குன்றம் அருகே பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
எந்தவித முன்னறிவுப்புமின்றி பேருந்துக் கட்டணத்தைக் கிட்டத்தட்ட 2 மடங்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதால் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு வலுத்து வருகின்றது. இதனால் நேற்று முதல் தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்களின் போராட்டம் 3ஆவது நாளாகத் தொடர்கிறது. சென்னை, கோவை, விழுப்புரம், சேலம், தஞ்சை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் பசுமலைப் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மதிய உணவு இடைவெளி நேரத்தில், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி நுழைவு வாயில் முன் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாணவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கலைந்து போகுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காவல் துறையினரின் பேச்சை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் மாணவர்கள் ஈடுபட்டார்கள். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் திடீரென மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.

காவலர்களின் இந்த திடீர் தடியடியால் மாணவர்கள் சிதறி ஓடியதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த மாணவர்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் மாணவர்களின் போராட்டம் மற்ற கல்லூரிகளுக்கும் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கல்லூரிகளுக்கு அருகே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
