battle between couples because of buying costly mobile wife murdered by her husband

அதிக விலையுள்ள மொபைல் ஃபோனை ஏன் வாங்கினாய் என்று சண்டையிட்ட மனைவியை ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற கணவன் பின் போலீஸில் சரண் அடைந்தார். 

கோவை மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவ விவசாயி பாலமுருகன்(38). அதே ஊரில் வசித்து வந்தார் 37 வயதான முத்துலட்சுமி. இவர், ஏற்கெனவே திருமணமாகி கணவரை விட்டுப் பிரிந்திருந்த நிலையில், பாலமுருகன் அவரை கடந்த 2011ல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். 

விவசாயி பாலமுருகனுக்கு புதிதாக மொபைல் போன் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதை அடுத்து அவர் சற்று விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக் கொண்டு அதைத் தன் மனைவியிடம் காட்டுவதற்காக, ஆசையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். முத்துலட்சுமி நேற்று முன் தினம், வேலாயும்தம்பாளையத்தில் உள்ள தோட்டத்தில், தோட்ட வேலை செய்து கொண்டிருந்தாராம். அந்த நிலையில், அவரிடம் சென்ற பாலமுருகன், தான் புதிதாக வாங்கிய மொபைல் போனை ஆசையுடன் காட்டியுள்ளார். 

ஆனால், அவ்வளவு விலை கொடுத்து, தங்கள் நிலை மீறி மொபைல் போன் வாங்கியது முத்துலட்சுமிக்குப் பிடிக்கவில்லையாம். இதனால் அவர், பாலமுருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவன் மனைவிக்கு இடையே வாய்த்தகராறு இதனால் முற்றியுள்ளது. பேசிக் கொண்டே இருந்த பாலமுருகன், ஆத்திரத்தில், அருகில் இருந்த களை எடுக்கும் மண் வெட்டியால் முத்துலட்சுமியைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த முத்துலட்சுமி படுகாயமடைந்த நிலையில், அங்கேயே மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், பின்னர் கிணத்துக்கடவு போலீஸிடம் சென்று சரண் அடைந்தாராம். ஒரு மொபைல் போன் இருவரின் வாழ்க்கையைப் பறித்து விட்டது கண்டு ஊர் மக்கள் பெரிதும் வருந்தினர்.