ஒவ்வொரு புத்தாண்டின்போதும் சென்னை மற்றும் புதுச்சேரியில் கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம். நட்சத்திர விடுதிகள், கிழக்குக் கடற்கரை சாலை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். டிசம்பர் 31-ம் தேதி இரவு ஏராளமானவர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்  நகரச் சாலைகளில் உற்சாகத்துடன் பயணித்து புத்தாண்டை வரவேற்பார்கள். 

அதேபோல, புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி வண்ணமயமாகத் தயாராகி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியை நோக்கி படையெடுப்பது வாடிக்கை. சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகக் கடற்கரை சாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளைச் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

இந்நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ஹோட்டல்கள், உணவகங்கள், பார்களுக்கு கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 31-ம் தேதி நள்ளிரவு 1 மணி வரையிலும் விற்பனை நேரத்தை நீட்டித்துள்ளது. உணவகங்கள் மற்றும் மொத்த மது விற்பனை நிலையங்களும் இரவு திறந்து வைக்கப்படும். மேலும், ஹோட்டல்கள் மற்றும் பார்களில் நடைபெறும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் கண்காணிக்க நகராட்சி சிறப்பு குழுக்களை அமைத்துள்ளன.