Asianet News TamilAsianet News Tamil

நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டு பனியன் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை...

Banyan Workers Order Office Siege to Hear Pending Salaries ...
Banyan Workers Order Office Siege to Hear Pending Salaries ...
Author
First Published Dec 14, 2017, 9:15 AM IST


திருப்பூர்

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்று, சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பனியன் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தையல், ஐயனிங், செக்கிங் உள்பட பல்வேறு பிரிவுகளில் 400-க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் இவர்களுக்கு இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லையாம்.

இதனால், கடந்த 6–ஆம் தேதி முதல் பெண் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் உரிய தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தி வழங்க நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. பனியன் பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சம்பத் தலைமையில் தலைவர் மூர்த்தி, செயலாளர் நடராஜ் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் நலத்துறை அதிகாரி பிரேமாவை சந்தித்து நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும், சம்பளத்தை உயர்த்த பனியன் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பனியன் நிறுவன நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து . தனியார் நிறுவன நிர்வாகிகள் வந்திருந்தனர். தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகளுடன் தொழிலாளர் நலத்துறை அதிகாரி பிரேமா சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் தனியார் நிறுவனத்தினர் இன்று (வியாழக்கிழமை) மாலைக்குள் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினை  தீரும் வரை தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் இருதரப்பிலும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். அதனை ஏற்றுக் கொண்டு இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios