திருச்சியில் சிண்டேகேட் வங்கி மேலாளர் ஒருவர், தனது மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்சி, சத்திரம் பூசாரி தெருவில், மங்கலம் அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் ராமசுப்ரமணியன் (37). இவர் சிண்டிகேட் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் சிண்டிகேட் வங்கிக்கு பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ராமசுப்ரமணியன் மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருடன் தனது 5 வயது மகளான ஆருத்தா உடனிருந்தார்.

இந்த நிலையில், வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவரது மனைவி கோமதி (எ) ஆவுடையம்மாள் பூட்டிக் கிடந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால், சாவி துவாரம் வழியாக பார்த்தபோது, ராமசுப்ரமணியன் தூக்குப்போட்ட நிலையில் தொங்கியது தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோமதி பதறி அடித்து அழுதுள்ளார். 

இவரது சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கப்பக்கத்தினர், கதவை உடைத்துப்பார்த்தபோது, ராமசுப்ரமணியனும் அவரது மகள் ஆருத்ராவும் தூக்குப்போட்ட நிலையில் தொங்கியுள்ளனர். இதனை அடுத்து, அவர்கள் இருவரையும மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர்களைப் பரிசோதனை செய்த டாக்டர், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கணவன், குழந்தை இறந்து துக்கத்தில் கலங்கிப்போன கோமதி, சாலைக்கு ஓடிவந்து வாகனங்களைக் நோக்கி பாயப் போனார். உறவினர்கள் அவரை மீட்டு பத்திரமாக அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராமசுப்பிரமணியன் வேலை பார்க்கும் சிண்டிகேட் வங்கியில் இருந்து வெளியே வந்தவர், அதிகாரிகளை நோக்கி உங்களிடம் வேலை
பார்ப்பதற்கு தூக்குப்போட்டு செத்துடலாம் என்று திட்டிக் கொண்டே வெளியேறியதாக கூறப்படுகிறது. ராமசுப்ரமணியன் ஏன் ஆருத்ராவுடன் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு வேறு காரணம் உண்டா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.