கரூர்,

கரூரில் நீண்ட நேரம் காத்திருந்த மக்களிடம், வங்கியில் குறைந்த அளவு பணம் இருந்ததால் வங்கி மேலாளர் ரூ.2 ஆயிரம் வாங்கிக் கொள்ளுமாறு கூறியதால், வாக்குவாதத்தில் ஈடுபட்டும், வங்கியை முற்றுகையிட்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வரை பொதுமக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுப்பதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாததால் வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது வழக்கமானது.

கரூர் தாந்தோணி மலையில் கரூர்- திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் நேற்று காலையில் இருந்து நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்தனர். பொதுமக்களுக்கு அவர்கள் கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது.

இதையடுத்து மதியம் வங்கியில் குறைந்த அளவு பணம் இருந்ததால் வங்கி மேலாளர் மற்றவர்களிடம் ரூ.2 ஆயிரம் வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நாங்கள் காலையில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கி முன்பு காத்திருக்கிறோம். மற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துவிட்டு, எங்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கொடுப்பதா? என்று கூறி வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வங்கி முன்பு அமர்ந்து, வங்கியை முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கரூர்- திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒருகட்டத்தில் வெறுத்துப்போன மக்கள், ரூ.2 ஆயிரம் பணத்தை வேறுவழியின்றி வாங்கிக்கொண்டுச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தினால் மக்கள், மத்திய அரசின் மீது எவ்வளவு கோவத்தில் இருக்கின்றனர் என்பது தெரிகிறது.