கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதததால் அந்தப் பள்ளத்தில் வாழை மரம் மற்றும் செடிகளை நட்டு மக்கள் விநோத போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகே நுள்ளிவிளை பேரூராட்சிக்கு உள்பட்ட குதிரைபந்திவிளையில் ஐந்து சாலைகள் சந்திக்கின்றன. இந்த பகுதி வழியாக பேரூராட்சியின் குடிநீர் குழாய் செல்கிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் வெளியாகி சாலையில் ஆழமாக பள்ளம் ஏற்பட்டது.

இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு, மக்கள் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று அந்த வழியாக, பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஒரு வேன் சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கியது. வெகுநேர போராட்டத்திற்குப் பின்பு அந்த வேன் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டத்தை வேறொரு வடிவத்திற்கு கொண்டு சென்றனர்.

அது என்னவென்றால், “வாழை மற்றும் செடிகளை எடுத்து வந்து, சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தில் நட்டனர்.” இந்த விநோதமான போராட்டத்தை நடத்தி, பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் வில்லுக்குறி பேரூராட்சி தி.மு.க. அவைத்தலைவர் சகாயம், ஒன்றிய குழு உறுப்பினர் ஆல்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த இரணியல் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பள்ளத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

பின்னர், சாலையில் நடப்பட்டிருந்த வாழை மற்றும் செடிகளை அகற்றி காவலாளர்களே அகற்றினர்.