Ban hydrocarbon or else continue to fight until death warning the protesters

வடகாடு

சட்டமன்ற கூட்டத் தொடரில், ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால், சாகும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி பொதுமக்கள் தொடங்கிய போராட்டம் கடந்த 9-ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டது.

இருப்பினும் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடக்கிறது.

வடகாடு பெரியகடைவீதியில் 16-வது நாளாக நேற்று போராட்டம் நடந்தது. இதில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் உருவாகும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று சித்தரித்து, ஆண்கள் மற்றும் பெண்கள் கை, கால், தலையில் கட்டுப்போட்டு கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், வடகாடு, மாங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் விளைபொருட்களுடன் கருப்பு கொடி ஏந்தியவாறு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வடகாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க ஊர்வலமாக வந்தபோது, வடகாடு குருந்திடிப்புஞ்சையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராதா திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் நல்லாண்டார்கொல்லையில் 33-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது நல்லாண்டார்கொல்லை பகுதியில் விளைந்த விளைபொருட்கள் மற்றும் பயிரிடப்பட்டுள்ள செடிகளை பிடுங்கி எடுத்து வந்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேகரிக்க கட்டப்பட்டுள்ள தொட்டியில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தையும், வடகாடு, வானக்கண்காடு, கருக்காகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை எடுக்க தடை விதித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால், சாகும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.