இந்தியாவின் பல முக்கிய கோயில்களில் கேமரா, செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீவிரவாத அச்சுறுத்தல் காரணம் என கூறப்பட்டது. ஆனால், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திலும் அதே தடையை அமல்படுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் செல்போன், கேமராக்களை கொண்டு செல்ல தடை விதித்து ராணுவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது. மேலும், பேக்கரும்பு பகுதியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்துல்கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம், உரிய அனுமதி பெற்ற பின்னரே, அங்கு செய்தி சேகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு செல்லும் பொதுமக்கள், அங்குள்ள அவரது நினைவு பொருட்களை பார்த்து ரசிப்பதுடன், அதன் அருகில் இருந்து தங்களது செல்போனில் செல்பி எடுத்து சென்றனர். ஆனால், அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருத்தத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “அப்துல்கலாமை சந்திக்க யாருக்கும் வாய்ப்பு கிடைத்தது இல்லை. அவருடன் புகைப்படம் எடுக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆசை இருந்தது. ஆனால், அது நடக்காத காரியமாக இருந்து வந்தது. தற்போது, அவரது நினைவாக, அவர் பயன்படுத்தி பொருட்களுடன் செல்பி எடுக்க வந்தோம். ஆனால், அதற்கும் தடை விதித்துள்ளனர்” என வேதனையுடன் தெரிவித்தனர்.