சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். 

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை - எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், “ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள். இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவி; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு எனது உளங்கனிந்த பக்ரீத்திருநாள் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு தடைக்கற்களாக விளங்குகின்ற ஆணவம், அநீதி, துரோகம்,சூழ்ச்சி ஆகியவை ஒழிந்து நல்லஎண்ணங்களும், மனிதநேயமும் தழைத்தோங்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் அனைவரும்ஒற்றுமையுடன் செயல்பட உறுதியேற்போம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துகள். பிரிவு, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் உண்மை உணர்வை வலுப்படுத்துவதன் மூலம், ஒரு குடும்ப மாக அமைதியான, இணக்கமான இந்தியாவை உருவாக்குவோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: உலக முஸ்லீம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம்பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகள்.