திருச்சி

திருச்சி மைய பேருந்து நிலைய பாலூட்டும் அறையில் பிறந்து 10 நாள்களே ஆன ஆண் குழந்தை அனாதையாக விடப்பட்டு இருந்தது. பின்னர், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைகப்பட்டது.

திருச்சி மைய பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையில் நேற்று காலை பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது, குழந்தையை தூங்க வைக்கும் தொட்டிலில் பிறந்து 10 நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. அந்த குழந்தையை அவரது தாய் தூங்கவைத்துவிட்டு கழிவறைக்குச் சென்றிருக்கலாம் என அந்த பெண் நினைத்தார். ஆனால், வெகு நேரமாகியும் குழந்தையை தூக்க யாரும் வராவில்லை. இதனால் அவர், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

உடனே, அங்கு வந்த மாநகராட்சி துப்புரவு கண்காணிப்பாளர் ஆனந்தன், அந்த குழந்தையின் தாய் அங்கு இருக்கிறாரா? என மைய பேருந்து நிலைய பகுதி முழுவதும் தேடிப் பார்த்தார். பின்னர், இதுபற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்தார். ஆனாலும் யாரும் குழந்தையைத் தேடி வரவில்லை.

பின்னர், இதுபற்றி மைய பேருந்து நிலைய காவல் உதவி மையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளரிடம் தெரிவித்தார். உடனே அவர் குழந்தையைப் பெற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்குத் “தொட்டில் குழந்தை திட்டத்தில்” அந்த குழந்தைச் சேர்க்கப்பட்டுள்ளது.

பெற்ற குழந்தையை பேருந்து நிலைய பாலூட்டும் அறையில் அனாதையாக விட்டுச் சென்ற தாய் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் பதிவாகி உள்ளதா என்று காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.