டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளிடம் ஆங்கில பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தி சேகரிக்க சென்றார். அப்போது தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆங்கிலத்தில் பேட்டியளித்து கலக்கினார்.

டெல்லி ஜந்தர்மன்தரில் தமிழக விவசாயிகள் 38 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறேன் எனவும் எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் அய்யாகண்ணு நாங்கள் போராட்டமும் நடத்தவில்லை, வீட்டுக்கும் செல்லமாட்டோம் என முடிவெடுத்து அங்கேயே அமைதியான முறையில் மத்திய அரசின் முடிவுக்காக காத்து கொண்டு வருகின்றனர்.

இதனிடையே போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளிடம் ஆங்கில பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தி சேகரிக்க சென்றார். அப்போது தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆங்கிலத்தில் பேட்டியளித்து கலக்கினார்.

அப்போது அய்யாக்கண்ணு பேசியதாவது:

எங்கள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றார்.

தமிழகத்தில் உள்ள வங்கிகள் தான் எங்களுக்கு கடன் கொடுத்தது. ஆனால், அவற்றின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. மேலும் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் கீழ் செயல்படுகிறது.

அதனால் தான் நாங்கள் டெல்லியில் போராடுகிறோம். ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் உள்ள பயிர்கள் தண்ணீரின்றி வறண்டு விட்டது.

நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மத்திய அரசும் மாநில அரசும் எங்களை கண்டு கொள்ளவே இல்லை.

நாங்கள் மாநில அரசிடம் எண்களின் நிலை குறித்து புகார் அளித்ததுடன் 6 முறை சிறைக்கும் சென்றுள்ளோம். ஆனால் எந்தவித பலனும் இல்லை.

1970 ஆம் ஆண்டு ஒரு டன் கரும்பிற்கு 90 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது ஆசிரியரின் மாத சம்பளமும் 90 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் தற்போது ஆசிரியருடைய சம்பளம் 36 ஆயிரம் ரூபாயாக உள்ளது. எங்களுக்கு மட்டும் ஒரு டன் கரும்பிற்கு 2000 ரூபாய் மட்டுமே வழங்கபடுகிறது.

நாங்கள் முதலில் 174 பேர் போராட்டத்திற்கு வந்தோம். அதில் ஒருசிலருக்கு உடல் நிலை சரி இல்லாததால் தற்போது 110 பேர் போராடி வருகிறோம்.

மத்திய அரசு எங்களுக்கு உதவவில்லை என்றால் நாங்கள் சாகும் வரை போராட்டத்தை தொடருவோம் என அய்யாக்கண்ணு கூறினார்.

ஆங்கிலத்தில் பேசி கலக்கிய அய்யாக்கண்ணுவை கண்டு அங்கிருந்தவர்கள் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.