தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டது. இதைதொடர்ந்து கடந்த ஆண்டு மழை அறவே இல்லாமல் போனதால், விவசாயம் முற்றிலும் பாதித்தது. விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர் என தினமும் செய்திகள் வெளியானது.

விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒன்றரை மாதமாக அய்யாகண்ணு தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு நூதன போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர்களும், கல்லூரி மாணவர்களும், சமூக நல அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

குறிப்பாக தமிழக விவசாயிகள் நடத்திய அறப்போராட்டத்துக்கு உத்தரபிரதேசம், பஞ்சம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். மேலும், தமிழக விவசாயிகளுடன் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் பிராணம பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக விவசாயிகள் யாரும், வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. சொந்த பிரச்சனைகளால் இறந்தனர் என குறிப்பிட்டுள்ளது. இதை அறிந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து அய்யாகண்ணு கூறுகையில், தமிழக விவசாயிகளின் பிரச்சனையை கவனிக்க அரசு தவறிவிட்டது. தற்போது யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமான பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

இதுஅனைத்து அப்பட்டமான புளுகு ஆகும். வங்கியில் கடன் வாங்கி விவசாயம் நடத்துபவர்கள், வறட்சியால் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் விவசாயியிடம், வங்கி அதிகாரிகள் அநாகரிகமான பேச்சில் ஈடுபடுகின்றனர். குடும்பம், மனைவி, குழந்தைகளை பற்றி பேசுவதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதுபோன்ற தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் குறித்து எந்த போலீசாரும் வழக்குப்பதிவு செய்வதில்லை. தற்கொலைக்கான காரணத்தையும் முழுமையாக பதிவு செய்வதில்லை. இவை அனைத்தும் தமிழக அரசின் திட்டமிட்ட சதி.

இதுவரை 600க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். ஆனால், உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசு, எங்களை பலியாக்கி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.