தர்மபுரி நகரில் ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. கடந்தாண்டை விட இந்தாண்டு பூக்கள் – பழங்கள் விலை அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளை தூய்மைப்படுத்துவது வழக்கம். இந்த நாளில் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து விதமான ஆயுதங்களை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து பழங்கள், பொரி கடலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கமாகும்.
ஆயுதபூஜை விழாவையொட்டி தர்மபுரி நகரில் சாம்பல் பூசணி, வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழவகைகள், வாழைமரம், மாயிலை, பொரிகடலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை ஞாயிற்றுக் கிழமை படுஜோராக நடந்தது. இந்த பொருட்களை வாங்க தர்மபுரி நகரில் உள்ள கடைவீதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். முக்கிய சாலைகளில் கூட்டம் அலைமோதியது. பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூஜையில் பயன்படுத்தப்படும் வாழைப்பழம் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்தது. லாரி வாடகை உயர்வு காரணமாக வாழைப்பழங்களின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்தது. ஒரு கிலோ ஏலக்கி வாழைப்பழம் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், 18 பழங்கள் கொண்ட ஒரு சீப்பு, கற்பூரவள்ளி மற்றும் பூவாழை பழம் ரூ.100–க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஒரு கிலோ ஆப்பிள், ரூ.130 முதல் ரூ.150–க்கும், சாத்துக்குடி ரூ.70–க்கும், ஆரஞ்சு ரூ.80–க்கும், கருப்பு திராட்சை ரூ.60–க்கும், பன்னீர் திராட்சை ரூ.80–க்கும், மாதுளை ரூ.100 முதல் 150–க்கும் விற்பனையானது. இதே போன்று கொய்யா, பேரிக்காய் உள்பட பழ வகைகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.
ஆயுத பூஜையில் திருஷ்டி பரிகாரம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் சாம்பல் பூசணி விற்பனையும் அதிகரித்தது. ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. பூஜையில் முக்கிய அங்கம் வகிக்கும் பூக்களின் விலையும் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சாமந்திப்பூ ரகத்திற்கு ஏற்றார் போல் ரூ.200 முதல் ரூ.250–க்கும், செண்டுமல்லி ரூ.50 முதல் ரூ.70–க்கும், மல்லிகைபூ ரூ.465–க்கும், குண்டுமல்லி ரூ.500–க்கும், கோழிக்கொண்டை பூ ரூ.50–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரகத்திற்கு ஏற்றார் போல் ஒரு பூமாலை ரூ.150 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்பட்டது. போதுமான மழை இல்லாத காரணத்தினால் வாழைக்கன்று மற்றும் வாழை மரங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் வாழை மரங்களின் விலையும் அதிகரித்து உள்ளது.
தர்மபுரி நகரில் பெரும்பாலான கடைகளில் ஆயுத பூஜைக்காக கட்டப்படும் அலங்கார தோரண பூக்கள், மாயிலை, அலங்கார பொருட்களின் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. ஆயுத பூஜையை முன்னிட்டு தர்மபுரி நகரில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள், மோட்டார் பணிமனைகள், லாரி பழுது பார்க்கும் நிலையங்கள் மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்டுள்ளது.
