Automatic cameras in 195 places for tiger and cheetah survey in mudhumalai

நீலகிரி

முதுமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணிக்காக 195 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் நடப்பு ஆண்டிற்கான வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள், கடந்த 18-ல் தொடங்கி 23-ல் முடிவுற்றது. இந்தப் பணியில், வனவிலங்குகளின் விவரங்களை முதல் முறையாக புதிய மொபைல் செயலியில் பதிவு செய்தனர்.

இந்தப் பணியைத் தொடர்ந்து, புலிகள், சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணிகளுக்காக, முதுமலை வனப்பகுதியில் 195 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

வரும், 28-ஆம் தேதி (அதாவது நாளை) முதல் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி 25 நாள்கள் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியது: "முதுமலையில் நடப்பு ஆண்டில், இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஒரு இடம் வீதம்195 இடங்களில் தலா இரண்டு கேமரா வீதம் மொத்தம் 390 கேமரா பொருத்தப்படுகிறது.

25 நாள்கள் நடக்கும் இந்த கணக்கெடுப்பு பணியில் புலிகளை தவிர, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உயிரினங்கள் குறித்த விவரங்களும் கணக்கெடுக்கப்படும்.

முதல் 20 நாள்கள் கேமராக்கள் ஒரே இடத்தில் வைக்கப்படும். இறுதி ஐந்து நாட்கள் மட்டும் தலா ஒரு கேமரா மட்டும் வேறு இடத்தில் மாற்றி வைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.