திருவண்ணாமலை

பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து திருட முயன்ற ஆட்டோ ஓட்டுநர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டார். அங்காடியின் வெளியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் நெசவு மற்றும் மளிகை பொருள் விற்பனை செய்யும் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார்.

கடந்த 25-ஆம் தேதி இரவு வேலைநேரம் முடிந்ததும் பல்பொருள் அங்காடியை ஊழியர்களுடன் பூட்டிவிட்டு அண்ணாதுரை வீட்டிற்குச் சென்றார். அப்போது நள்ளிரவு ஆட்டோவில் வந்த ஒருவர் பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து திருடமுயன்றுள்ளார். அந்த சமயம்  அவ்வழியாக யாரோ வருவதைபார்த்து திருட முயன்றவர் ஆட்டோவில் ஏறி தப்பித்து  சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் பல்பொருள் அங்காடியை திறப்பதற்காக அண்ணாதுரை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், அவர் கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அம்மனந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் (19) பூட்டை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அண்ணாதுரை புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநர் விஜய்யை கைது செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். விஜய்யிடம் விசாரணை நடந்து வருகிறது.