ராமநாதபுரம் அருகே, ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதால் ரூ.1 கோடியே 60 லட்சம் மாயமாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் அருகே, ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், ரூ.கோடியே 60 லட்சம் மாயமாகிவிட்டதாகவும், முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்த ஊழியர்களிடம் விடிய விடிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துச் சென்று நிரப்பும் பணியில் ஈடுபடும் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் 4 பேர், சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதில், கடலாடி அருகே மலட்டாறு முக்குரோட்டில், தாங்கள் வந்த, ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனம், 10 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகவும், அதில் இருந்த ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் மாயமாகிவிட்டதாகவும் தெரிவித்தனர். அப்போது, புகார் அளித்த ஊழியர்கள் 4 பேரும், ஒரு சிறிய சிராய்ப்பும் இல்லாமல் இருந்தனர். இதனால், போலீசாருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர். 

இதையறிந்த ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார், விடிய, விடிய விசாரணை நடத்தினர். அவர்களது விசாரணையிலும், முன்னுக்கு பின் முரணான தகவல் கிடைத்திருப்பதால், 4 பேரையும், ராமநாதபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்திற்கு விடியற்காலையில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.