atm delivers a fake 2000 rupees note
மதுரை
மதுரையில், குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்மில் வந்ததால், அதிர்ச்சியடைந்தவர் புகார் அளிக்க சென்றபோது வங்கி அதிகாரிகளும், காவலாளர்களும் ஏற்க மறுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், வண்டியூரைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவருடைய மனைவி வகிதா ராணி (39). இவர் தனது மகனிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து வர சொல்லியிருக்கிறார். அதன்படி, அவரது மகனும் வண்டியூரில் உள்ள ஒரு தேசிய வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.8 ஆயிரம் எடுத்து வந்துள்ளார்.
அதில், வந்த ரூபாய் நோட்டுகளில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு குழந்தைகள் விளையாடும் டம்மி ரூபாய் நோட்டாக இருந்துள்ளது.
அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வகிதா ராணி அருகில் உள்ள வங்கி அலுவலத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
வங்கி அதிகாரிகள் அந்த புகாரை ஏற்க மறுத்தனர். மேலும், காவல் நிலையம் செல்லுமாறு கூறியுள்ளனர்.
வகிதாவும் அவர்கள் சொன்னபடியே காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், காவலாளர்களும் அவரது புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.
புகாரை ஏற்க மறுத்ததால் சினம் கொண்ட வகிதாராணி, நேற்று அந்த ரூபாய் நோட்டுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர், வகிதா மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
போலி ரூபாய் நோட்டு குறித்து வங்கி அதிகாரிகளும், காவலாளர்களும் ஏன் புகாரை ஏற்க மறுத்தனர்? என்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
